Thursday, April 23, 2009

M.G.R

நண்பர்களே ஈழப்போராட்டத்திற்கும் ஈழ மக்களுக்கும் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் அளவிட முடியாதவை. அதில் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஒருவேளை இது நீங்கள் அறிந்த செய்தியாய் இருக்கலாம் அப்படியாயின் செய்தியை தெரியாதவர் தெரிந்து கொள்ளட்டும். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயத்தில் நமது வீரமிகு தலைவன் அண்ணண் பிரபாகரனும் ஈழதேசத்தின் குரல் ஐயா பாலசிங்கம் அவர்களும் சென்னையில் தங்கி இருந்தனர். அப்போது அவர்கள் சிங்கள ராணுவத்துடன் போரிட வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஆயுதங்கள் அடங்கிய ஒரு கண்டெய்னர் சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அதற்கு சில நாள்கள் முன்பு தான் வேறொரு இயக்கத்திற்க்கு சொந்தமான ஆயுத கண்டெய்னர் பிடிப்பட்டது எனவே இம்முறை நமக்கு அவ்வாறு ஏற்படாமலிருக்க வேண்டும் என்றநிலையில் எம்.ஜி.ஆர் அவர்களை அவர்கள் அணுகினர். எல்லாவற்றையும் செவிமடுத்த எம்.ஜி.ஆர் உடனே ஒரு சுங்கத்துறை உயரதிகாரியை டெலிபோனில் கூப்பிட்டு 'இந்த கண்டெய்னர் எண், இந்த இடத்திற்க்கு வந்து சேர வேண்டும்" என்று கட்டளை இட்டார் அதன்படி அந்த கண்டெய்னர் சென்னை திருவான்மீயூரில் குறிப்பிடப்பட்ட வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது. அதன்பின் ஈழத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உதவி மட்டுமின்றி அதற்கு சில நாள்கள் கழித்து ஈழப்போராட்டத்தை தொடர நிதி சிரமம் ஏற்ப்பட்ட போது அண்ணண் பிரபாகரன் அவர்கள் ஐயா பாலசிங்கம் அவர்களிடம் தயங்கிய படியே எம்.ஜி.ஆர்_அவர்களிடம் உதவி கேட்டால் செய்வாரா என்றார். அதன்பிறகு எம்.ஜி.ஆரை நேரே சந்தித்து சொன்ன போது எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார் அதற்கு இருவரும் 4 கோடி ரூபாய் இந்திய பணம் தேவைப்படும் என்றார்கள். உடனிருந்த பண்ருட்டி ராமசந்திரனிடம் எம்.ஜி.ஆர், நாம் ஈழத்தமிழர்களுக்காக சேர்த்துள்ள நிதி எவ்வளவு அதை இவர்களுக்கு நேரடியாக தந்து விடலாமா? என்று கேட்டார் உடனே பண்ருட்டி ராமசந்திரன் அவ்வாறு தருவது முறையாகாது மாறாக ஈழப்பகுதிகளில் மக்கள் நலனுக்கான சில திட்ட வரைவுகளுடனும் மதிப்பீடுகளுடனும் வந்தால் தருவதில் தவறில்லை என்றார். அதன்படி திட்டம் தயாரிக்கப்பட்டு 4 கோடி ரூபாய்கான செக் எம்.ஜி.ஆரால் பிரபாகரனிடம் தரப்பட்டது. இச்செய்தியை உடனிருந்த சில பேர் பத்திரிக்கைக்கு கசியவிட்டனர். பத்திரிக்கை தன்னுடைய தலைப்பிலேயே "எம்.ஜி.ஆர் விடுதலைபுலிகளுக்கு பணம் தருகிறார்" என்று எழுதிவிட்டன. இச்செய்தியை கையில் எடுத்து கொண்ட இனவெறியன் ஜெயவர்த்தனே ராஜீவ்_வை அழைத்து வானுக்கும் பூமிக்கும் குதித்தார். சினங்கொண்ட ராஜீவ் எம்.ஜி.ஆரை டெலிபோனில் அழைத்து "இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் அது இது" என்று குதித்ததை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. சில மணி நேரங்களில் பிரபாகரனையும் ஐயா பாலசிங்கத்தையும் வரச் சொன்னார். அவர்கள் வந்தவுடன் அந்த செக்_கை திருப்பி தந்து விடுங்கள் என்றார். கைக்கு எட்டிய பணம் நம் இனத்தின் போராட்ட உதவிக்கு கிட்டவில்லையே என்ற உணர்வுடனேயே வருத்ததுடன் ஐயா பாலசிங்கம் அந்த செக்_கை திருப்பி தந்தார். எம்.ஜி.ஆர் அவர்களிடம் "ராஜீவ்" சொன்னதை சொல்லிவிட்டு "எங்கள் இனத்துக்கு உதவுதை விரும்பாத, பிரதமர் ராஜீவ் ஒரு கோழை" இப்படிப்பட்ட கோழையை பிரதமராய் பெற்று விட்டதால் என்னால் உங்களுக்கு அரசாங்க ரீதியாய் உதவ முடியவில்லை என்றார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களிடம் "அதனாலென்ன அரசாங்க பிரதிநிதியாய் நான் உதவுதை தான் ராஜீவ்_ஆல் தடுக்க முடியும் தமிழனாய் உதவுதை யாரும் தடுக்கமுடியாது" என்று கூறி விட்டு என்னோடு வாருங்கள் என்றார். பிரபாகரனையும் ஐயா பாலசிங்கத்தையும் தன்னுடைய பாதாள அறைக்கு அழைத்து சென்ற எம்.ஜி.ஆர் சிறுது நேரத்திலேயே அவர்களிருவரிடமும் தன்னுடைய சொந்த பணமான 4 கோடியை கொடுத்தார். இது நடந்த வரலாற்று உண்மை. எம்.ஜி,ஆர் எத்தனை அளவிற்கு ஈழத்தமிழர்களை விரும்பினார் அவர்களின் விடுதலையை ஆதரித்தார் என்பதற்கு இது மிக பெரிய சான்றாகும். இவையாவும் ஐயா பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்ற புத்தகத்தில் அவராலேயே எழுதப்பட்டுள்ளவையாகும்.